| ADDED : ஜூலை 23, 2024 06:24 AM
தேனி: 'விவசாயிகள் விதைப்பிற்கு முன் விதைகளை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.' என, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.ஒவ்வொரு பயிருக்குமான விதையிலும் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும் என இந்திய விதைச்சட்டம் மூலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக நெல்லுக்கு 13 சதவீதம், சோளம், கம்பு, கேழ்வரகிற்கு 12, பயறு, எண்ணெய் வித்துகளுக்கு 9, காய்கறிகளுக்கு 7, பருத்திக்கு 10 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் கூடுதலாக இருந்தால், அந்த விதைகள் எளிதில் பூச்சி, பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகும். இது பயிர் வளர்ச்சியை பாதித்து, மகசூல் குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகள் பூச்சி, பூஞ்சை தாக்குதலை கட்டுப்படுத்த கூடுதல் செலவு செய்ய நேரிடும். இதனை தவிர்க்க சாகுபடி செய்ய உள்ள பயிரின விதை மாதிரிகளை பரிசோதனை செய்து விதைத்து பயன் பெறலாம். விதை மாதிரி பரிசோதனை செய்ய கட்டணமாக ரூ.80 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி - பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டியில் உள்ள தேனி விற்பனை குழு அலுவலக வளாகத்தில் இயங்கும் விதைப்பரிசோதனை நிலையத்தை நேரில் அணுகலாம் என, விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, வேளாண் அலுவலர்கள் சத்யா, மகிஷா தெரிவித்தனர்.