யானைகளை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை செயல்படுத்துங்கள்; சுருளி அருவிக்கு அடிக்கடி வருவதால் அச்சம்
கம்பம்: சுருளிஅருவி பகுதிக்கு யானைகள் அடிக்கடி வருவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யானைகள், மனிதர்கள் மோதல் சமீபமாக அதிகரித்து வருகிறது. சுருளி அருவிக்கு அடிக்கடி யானைகள் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து வருகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். வனத்துறைக்கும் நுழைவு கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படுகிறது. அத்துடன் சுற்றுலா பயணிகளை நம்பி 50க்கும் மேற்பட்ட சிறு,சிறு கடைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.எனவே யானைகள் சுருளி அருவி பகுதிக்கு வருவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பத்தை பயன்படுத்த வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது யானைகள் வரும் பாதையில் உயரமான மரத்தில் கேமராவுடன் ஒலிபெருக்கி ஒன்றையும் பொருத்தி விடுவார்கள். 50 மீட்டர் சுற்றளவிற்குள் யானைகள் வந்தால் கேமரா பதிவுகள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு சென்று விடும். அதிலிருந்த ஒலிபெருக்கியில் யானையை விரட்ட ஏழு விதமான ஒலிகள் எழுப்பப்படும். இதை கேட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். இதன் மூலம் யானை வருவது தடுக்கப்படும், மேலும் யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் முன்கூட்டியே தெரிந்து விடும்.கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கெம்மாரம்பாளையம் மற்றும் , இருளர் பகுதி பழங்குடியினர் கிராமங்களில் யானைகள் தொந்தரவை தடுக்க இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். எனவே, இதே தொழில்நுட்பத்தை சுருளி அருவியில் பயன்படுத்த வனத்துறை முன்வர வேண்டும்.