மண்ணெண்ணெய் வினியோகம் முடக்கம்; மலைவாழ் மக்கள் இருளில் தவிப்பு
மூணாறு : இடமலைகுடி ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளாக மண்ணெண்ணெய் வினியோகம் முடங்கியதால் மலைவாழ் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.கேரளாவில் மலைவாழ் மக்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரே ஊராட்சி மூணாறு அருகில் உள்ள இடமலைகுடி ஊராட்சியாகும். அங்கு அடர்ந்த வனத்தினுள் 26 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் 958 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் மின்சார வசதி இல்லாததால் வீடுகளில் வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.சமீபத்தில் நான்கு குடிகளில் 110 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால், அவர்களுக்கு அரசு மண்ணெண்ணெய் வழங்குவதில்லை.ஆனால் மின் இணைப்பு வழங்காத 24 குடிகளில் வசிப்பவர்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேஷன் மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது இல்லை என்பதால் மலைவாழ் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அவர்கள் இரவில் வெளிச்சத்திற்கு வீட்டினுள் தீ பற்ற வைத்து சமாளித்து வரும் நிலையில் மாணவர்கள் வீட்டு பாடங்களை படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இடமலைகுடி ஊராட்சிக்கு கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி துணைத்தலைவர் மோகன்தாஸ், நிலைகுழு தலைவர் சிவமணி ஆகியோர் தெரிவித்தனர்.