| ADDED : மே 21, 2024 07:43 AM
தேனி : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்கள் மைய வளாகத்தில் காலை 6:00க்கு இருக்க வேண்டும் என பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேனி லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்த பின் இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லுாரிகள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பிற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். பயிற்சியில் ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்மேற்பார்வையாளர் என குழுக்கள் பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலெக்டர் நேர்முகஉதவியாளர் ஷீலா, தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாலசண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதிகாரிகள் கூறுகையில், ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அலுவலர்கள் மையத்தில் காலை 6:00 மணிக்கு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டு, 85 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அளித்த தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தொகுதியில் 6500 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.இந்த ஓட்டுகள் எண்ணப்பட்டு அரைமணிநேரம் இடைவெளியை தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை 14 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் 5 சதவீத வி.வி.பேட்டில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கைக்காக 3 குழுக்களாக அதிகாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். மையத்திற்குள் அலைபேசி அனுமதி இல்லை. பதிவான ஓட்டுகளை ஏஜன்டுகளிடம் நன்றாக தெரியும் வகையில் காட்ட வேண்டும். இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு இருப்பது போல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றனர்.