மேலும் செய்திகள்
விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்
25-Aug-2024
'பசு இனங்களுக்கு சினை பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் அடிமாடாக விற்று விடாமல் தேனி கால்நடை மருத்துவ கல்லுாரி அதிநவீன சிகிச்சை மையத்திற்கு அழைத்து வந்தால் 2 மாதங்களில் குணப்படுத்தி பால் உற்பத்திக்கு கொண்டு வரலாம்' என, கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.தேனி அருகே தப்புக்குண்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லுாரியாக கால்நடை மருத்துவ கல்லுாரி,ஆராய்ச்சி நிலையம் 2020ல் துவங்கப்பட்டது. இங்கு கால்நடை உடற்கூறியல், உற்பத்தி மேலாண்மை, உடல் செயலியல் மற்றும் உயிர்வேதியியல், விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி, ஊட்டச்சத்தியல், நுண்ணுயிரியல், நோய் குறியியல், கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல், மருந்தியல் மற்றும் நச்சியல், கால்நடை விரிவாக்கக் கல்வி, ஒட்டுண்ணியியல், கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பம், கால்நடை சிகிச்சை, கால்நடை பண்ணை மேம்பாடு, இனப்பெருக்கம் மற்றும் ஈனியல், மருத்துவ சிகிச்சையியல், அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறை உட்பட 17 துறைகள் இயங்குகின்றன.2020 -- 2021 கல்வியாண்டு முதல் 4 ஆண்டு மாணவ, மாணவிகள் என 195 பேர் படிக்கின்றனர். கல்லுாரியில் முதல்வர் மற்றும் 49 பேராசிரியர்கள், 10 இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 29 பேர் பணிபுரிகின்றனர்.இக்கல்லுாரியின் ஒருங்கிணைந்த அதிநவீன சிகிச்சை மையத்தில் 2920 பசுக்கள், 29 எருமைகள், செம்மறி 702, வெள்ளாடுகள் 1794, நாய்கள் 2,124, பூனைகள் 67, நாட்டுக்கோழிகள் 856 என 8492 விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளன. இக்கல்லுாரியின் முதல்வர் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கான முன்னவர் விருது, வேளாண் அறிவியல் இயக்கத்தின் முன்னவர் விருது, கால்நடை அறிவியல் தமிழ் இயக்கத்தின் சார்பில் முன்னவர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இங்கு அளிக்கப்படும் சிகிச்சை, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு, சேவைகள், பயிற்சிகள் குறித்து அவர் தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக பேசியதாவது: பசுமாடுகள் அதிகம் நோய் பாதிப்பிற்குள்ளா வது ஏன்
சிகிச்சை மையத்தில் 2920 பசுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இதில் 70 சதவீதம் பசு இனங்களுக்கு பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தாது உப்புக்கள் கலந்த உணவு கிடைக்காததாலும், பசு இனங்களுக்கு உணவு வழங்கும் நடைமுறைகள் குறித்து வளர்ப்போர், விவசாயிகளுக்கு தெரியாததால் சினை பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, கேரளா பக்கத்தில் இருப்பதால் அடிமாடாக பசுக்கள் அனுப்பப்பட்டது வேதனை அளித்தது. எனவே, சினைப்பிடிக்காமல் இருக்கும் பசுக்களை இங்கு அழைத்து வந்தால் 2 மாதங்களில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி, பால் உற்பத்திக்கு உத்திரவாதம் வழங்கப்படும். இதை விவசாயிகள் புரிந்து கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற வேண்டும். நாய்கள் வளர்ப்பிற்கு ஆலோசனை
செல்லப்பிராணிகளாக நாய் வளர்ப்போர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நாள் ஒன்றுக்கு நீங்கள் வளர்க்கும் நாயுடன் நேரம் செலவழிப்பது அவசியம். அதேபோல் சணல் உருவாக்கிய சாக்கை எடுத்து அதில் படுக்க, உட்கார, அமர பழக்க வேண்டும். முக்கியமாக தரையில், மணலில், சிமென்ட் பரப்பில், மணல் பரப்பில், தண்ணீரில் உட்கார வைப்பதால் அதன் தோல் உடனடியாக பாதிப்பு ஏற்பட்டு தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க தினமும் செல்லப் பிராணிகளோடு நேரம் செலவழிக்க உரிமையாளர்கள் தயாராக வேண்டும். தோல் நோய் பாதித்த தெரு நாய்களை காப்பாற்ற முடியுமா
உள்ளாட்சி அமைப்புகள் நோய் பாதித்த நாய்களை பிடித்து வந்தால் அதற்கான தடுப்பூசி செலுத்தி குணப்படுத்த முடியும். இதனால் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படும். தொலை நிலை கல்வி சுய வேலை வாய்ப்பு பயிற்சி பற்றி
கடந்தாண்டில் 12 பேர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இப்பயிற்சிக்கு ரூ.1000 முதல் பயிற்சிக்கு தகுந்தவாறு ரூ.3 ஆயிரம் வரை பணம் கட்டணமாக செலுத்தி பயிற்சியில் சேரலாம். இதில் ஜப்பானிய காடை, நாட்டுக்கோழி, வெண்பன்றி, முயல் வளர்ப்பு, கால்நடை பண்ணை கழிவு பயன்படுத்துதல், உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல், கறவைமாடு பண்ணையம், செம்மறி, வெள்ளாடு, பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி என 10 பயிற்சிகள் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகளாகவும், கோழிப் பண்ணை மேலாளர், தீவன ஆலை மேற்பார்வையாளர் என 10 பயிற்சிகள் செயல்திறன் மேபாடு மூலம் வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சிகளாக வழங்கப்பட்டு, பல்கலையின் சான்றிதழும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு www.tanuvas.ac.inஎன்ற இணைய முகவரியில் விபரங்களை அறியலாம். விழிப்புணர்வு பணிகள் குறித்து
கால்நடை மருத்துவ மாணவ, மாணவிகளை கொண்டு என்.எஸ்.எஸ்., திட்டம் மூலம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொது சுகாதார மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் உள்ளிட்டவற்றை வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவும், கால்நடை பொது சுகாதார மருத்துவ முகாமை கல்லுாரி சார்பிலும் நடத்தி வருகிறோம். விவசாயிகள், பொது மக்கள் வேலை நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கால்நடை பராமரிப்பு, நோய் பாதிப்பு குறித்து தீர்வு கிடைக்க எங்களை அணுகலாம் என்றார்.
25-Aug-2024