கண்மாயில் நீர் தேங்காததால் 10 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு மறவபட்டியில் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், மறவபட்டி ருத்ராயப்பெருமாள் கோயில் கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. இப்பகுதியில் வளமான மண் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.மறவபட்டி பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் பல நுாறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. 50 ஏக்கர் நீர் தேக்கப் பரப்புள்ள ருத்ராயப்பெருமாள் கோயில் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள பண்ணைக்காடு, புல்வெளி தரிசு பகுதியில் பெய்யும் மழையால் பூசணிக்காய் ஓடை வழியாக கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கும். 1987ம் ஆண்டுஎம்.ஜி.ஆர்.,ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கண்மாய் மூலம் நேரடி பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர். கண்மாய், நீர் வரத்து கால்வாய் தொடர் பராமரிப்பு இல்லை. இதனால் கண்மாயில் தேங்கும் நீரின் அளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது. தற்போதும் கண்மாய் முழுவதும் முட்புதர் மண்டியுள்ளது. கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு
பெருமாள், மறவபட்டி:கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த மழைப்பொழிவு தற்போது இல்லை. மழை குறைவால் கண்மாயில் ஆங்காங்கே பள்ளங்களில் மட்டும் நீர் தேங்குகிறது. கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் மறவபட்டி, வரதராஜபுரம், போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, மேக்கிழார்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகமாகும். கண்மாயில் தேங்கும் நீர் 3 மாதத்தில் வற்றினாலும் நிலத்தடி நீர் ஆதாரம் கை கொடுக்கும். கடந்த பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் பல கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து ஓடைகள் சீரமைக்க வேண்டும்
மாரியப்பன், மறவபட்டி : கண்மாய் நிறைந்து மறுகால் செல்லும் நீர் அனுப்பபட்டி, ஏத்தக்கோயில், திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம் வழியாக வைகை ஆற்றில் சேரும்படி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான அளவில் நீர் தேக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பல கிராமங்கள் பயன்பெறும். நீர்வளத்துறையினர் இப்பகுதியில் முழுமையான சர்வே செய்து கடந்த காலங்களில் தேங்கிய நீர் தற்போது தேங்காதது குறித்து நடவடிக்கை எடுத்து நீர் வரத்து ஓடைகளை சீரமைக்க வேண்டும். முல்லை பெரியாறு உபரிநீர் திட்டம் தேவை
சின்னக்காமாட்சி:கண்மாயை ஒட்டி கோத்தலூத்து, மறவபட்டி, வரதராஜபுரம், மணியாரம்பட்டி கிராமங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஜமீன்தார் காலத்தில் இருந்து உள்ளது. இந்த நிலத்தையும் கண்மாயுடன் சேர்த்து நீர்த்தேக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி ஒன்றியத்தின் பல்வேறு கண்மாய்களுக்கு நீர் கிடைக்காமல் விவசாயம் நசிந்து வருகிறது. முல்லை பெரியாறு உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி பகுதிக்கு கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தில் மறவபட்டி கண்மாய்க்கு நீர் கிடைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொழில் வளம் மேம்படும். ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் மத்திய மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்தி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.