போடி அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ: பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதம்
போடி:போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 'தீ' வைப்பு சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு பரவிய காட்டுத் தீயால் பல ஏக்கர் மரங்கள் எரிந்தன. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.போடி- மூணாறு செல்லும் மெயின் ரோட்டில் போடிமெட்டு, மதிகெட்டான் சோலை மலைப்பகுதி அமைந்துள்ளது. போடிமெட்டு, புலியூத்து, அத்தியூத்து, குரங்கணி, தாவளம், வலசத்துறை, பிச்சாங்கரை, மேலப்பரவு, மரக்காமலை, வடக்குமலை உட்பட பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது.தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இங்கு உள்ள மரங்களுக்கு சமூக விரோத கும்பல் 'தீ ' வைத்து வருகின்றனர். இதோடு இப்பகுதியில் பல ஆண்டுகளாக மரப்பட்டைகள், மரங்களை வெட்டி கடத்துவது நடக்கிறது. கஞ்சா பயிரிடப்படுபவர்கள், கரி மூட்டம் போடுபவர்கள், கால்நடை மேய்க்கும் நபர்கள் 'தீ' வைக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வன விலங்குகள் மலை அடிவார பகுதிக்கு வர துவங்கி உள்ளன.போடி அருகே பிச்சாங்கரை, அக்காள், தங்கை மலை வனப் பகுதியில் சமூக விரோத கும்பல் நேற்று முன்தினம் இரவு வைத்த தீயால் பல ஏக்கர் அளவில் விலை உயர்ந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்தன. வன உயிரினங்கள் பலியாவதோடு, வன விலங்குகளும் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. போடி வனத்துறையிர் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். மற்ற பகுதிகளில் தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், சமூக வீரோத கும்பல் குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.