கல்லுாரி மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை இருப்பதை உறுதி செய்ய கடிதம்
தேனி:18 வயதுடைய மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்ய கலெக்டர்கள் மூலம் கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்யவும், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தேனி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில் '18 வயதுடைய வாக்காளர்கள், கல்லுாரிகள், ஐ.டி.ஐ.,களில் படிக்கும் மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்யவும், இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். அதற்காக கலெக்டர் மூலம் மாவட்டத்தில் உள்ள 26 கல்லுாரிகள், ஐ.டி.ஐ.,களுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மூலம் 17 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 18 வயதை எட்டியதும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.