| ADDED : ஏப் 15, 2024 01:01 AM
ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தும்மக்குண்டு வாலிப்பாறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ஜி.உசிலம்பட்டி, வண்டியூர் உட்பட தரைப்பகுதி கிராமங்களில், போடி, பெரியகுளம் தாலுகாக்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இலவ மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது இலவ மரங்களில் காய்ப்பு அதிகம் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை முதிர்ந்து காய்ந்த காய்களில் பஞ்சு பிரித்து எடுக்கப்படும். தற்போது சீசன் துவங்கிய நிலையில் இலவம் பஞ்சுக்கான போதிய விலை இல்லை. இதனால் இலவம் பஞ்சு எடுப்பதில் விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை.விவசாயிகள் கூறியதாவது: இலவ மரங்களில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு தேவையில்லை. மரங்களில் முதிர்ந்த அனைத்தும் காய்கள் தானாக உதிர்வதில்லை. முதிர்ந்த காய்களை மரங்களில் இருந்து பறிப்பதற்கு கூலியாக தினமும் ரூ.1000 தர வேண்டி உள்ளது. காய்ந்த காய்களை உடைத்து பஞ்சு பிரித்தெடுக்க நபர் ஒருவருக்கு தினமும் ரூ.300 முதல் 400 வரை கூலி செலவாகிறது. 100 கிலோ அளவில் பஞ்சு பிரித்தெடுத்து விற்பனைக்கு கொண்டு செல்ல ஐந்து நபர்கள் தேவை. தற்போது இலவம் பஞ்சு கிலோ ரூ.60 ஆக உள்ளது. இரு ஆண்டுக்கு முன் விளைச்சல் குறைவால் கிலோ ரூ.100 வரை விலைபோனது. வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இலவம் பஞ்சு விலையை குறைத்து விலை நிர்ணயம் செய்கின்றனர். வியாபாரிகள் மொத்தமாக பஞ்சு கொள்முதல் செய்து இருப்பில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளால் இருப்பு வைக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சீசன் நேரத்தை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலவம் பஞ்சுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு தெரிவித்தனர்.