தேசிய ஊரக வேலை திட்டத்தில் சிறு குளங்கள் ஏற்படுத்த உத்தரவு
கம்பம், : 'ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிறு குளங்கள் அமைக்க ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, அரசு உத்தரவிட்டுள்ளது,ஊராட்சிகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராம மக்களின் வறுமை நீங்கி வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது. ஆரம்பத்தில் என்ன வேலைகள் செய்யலாம், என்ன வேலைகள் செய்யக் கூடாது என அரசு நிபந்தனைகள் விதித்திருந்தது.தற்போது கிராமங்களில் ஏறக்குறைய எல்லா பணிகளும் நிறைவு பெறும் நிலைக்கு வந்துள்ளன. எனவே தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் 2 ஏக்கர் பரப்பில் சிறிய குளம் ஒன்று ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. வை தொடர்பு கொண்டு, இடத்தை தேர்வு செய்யவும், நூறு நாள் திட்டத்தில் பணியாற்றுபவர்களை இந்த பணியில் ஈடுபடுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊராட்சிச் செயலர்கள் கூறுகையில், 'நூறு நாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் தேர்வில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் வருவாய்த் துறையின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்படும்.', என்றனர்.