மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.சமீபத்தில் பெய்த மழையால் செப். 13ல் இந்த அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியது. அதன் பின் மழை குறைந்தது. கடந்த நான்கு நாட்களாக நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 500 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் 131.65 அடியாக குறைந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 900 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. நீர் இருப்பு 5083 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவியதால் நீர்வரத்து மேலும் குறைந்து நீர்மட்டமும் குறையும் வாய்ப்புள்ளது.