வினாடி வினா போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
ஆண்டிபட்டி: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0 சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான 'சூழல் அறிவோம்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடந்தது. ஆறு மாவட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த காலநிலை மாநாட்டில் வினாடி வினா இறுதிச்சுற்று போட்டி நடந்தது. மாநில அளவிலான இப்போட்டியில் ஆண்டிபட்டி ஒன்றியம் வரதராஜபுரம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராம் பிரணவ், தரணீசன் இருவரும் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாணவர்களை தலைமை ஆசிரியை தனபாக்கியம், அறிவியல் ஆசிரியர் முருகேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.