நண்பர் பலியான துக்கம் வாலிபர் தற்கொலை
உத்தமபாளையம்:தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் டூவிலரில் சென்ற நண்பர் மரத்தில் மோதி பலியானதால் துக்கம் தாளாமல் மின் ஒயரை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.உத்தமபாளையம் பாறைமேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சாம் நிசாந்த் 32. தனியார் கம்பெனியில் வேலை செய்தார். இவரது உறவினரும், நண்பருமான ஆனந்தராஜ் 30, தேசிய நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியாளராக இருந்தார். இருவரும் நேற்று முன்தினம் இரவு கோம்பையில் இருந்து இரு டூவீலர்களில் தனித்தனியே உத்தமபாளையம் நோக்கி சென்ற போது , கருக்கோடை என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக டூவீலர் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி அதே இடத்தில் சாம் நிசாந்த் பலியானார். தனது கண் முன்னே நண்பர் இறந்ததை பார்த்த ஆனந்தராஜ் துக்கம் தாளாமல் அருகில் இருந்து உயர் அழுத்த மின் டவரில் ஏறி ஒயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.