| ADDED : ஜூலை 05, 2024 05:39 AM
தேனி: புள்ளிமான்கோம்பை அருகே தருமத்துப்பட்டியில் மளிகை கடையில் புகையிலை விற்ற கடைக்கு 'சீல்' வைத்து ரூ. 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்னையை தடுக்க குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி,புள்ளிமான்கோம்பை அருகே தருமத்துப்பட்டியில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று அங்குள்ள செல்வராஜ் என்பவரின் மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். கடையுடன் இணைந்த வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஆயிரம் மதிப்பிலான புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தார். உணவுப்பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆண்டிப்பட்டி உணவுப்பாதுகாப்பு அலுவலர் ஜனகர்ஜோதிநாதன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி, கடைக்கு 'சீல்' வைத்தனர். உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கடையின் கதவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்ததால் கடை வியாபாரம் 15 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டினர்.அதிகாரிகள் கூறுகையில்,'பொதுமக்கள் தங்கள் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள், சில்லரையில் மது, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டால் 10581 அல்லது 93638 73078 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கூறுபவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றனர்.