மாணவர்களை தேசப்பற்று கொண்டவர்களாக மாற்ற ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும்: ஆர்.டி.ஓ., தாட்சாயினி பேச்சு
கம்பம் : 'மாணவர்களை ஆரம்ப கல்வியில் இருந்தே தேசப்பற்று கொண்டவர்களாக மாற்றுவதில் ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும்.' என, கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி பேசினார்.இப்பள்ளியில் 'தாய் நாடு இந்தியா' என்ற தலைப்பில் தேசப்பற்று, நமது சுதந்திர போராட்டம் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் நிர்வாகக்குழுவின் தலைவர் சவுந்தரராசன் தலைமை வகித்தார். தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார்.முதுநிலை முதல்வர் சுவாதிகா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உத்தமபாளையம் ஆர்.டி.ஒ.. தாட்சாயினி பேசியதாவது: சுதந்திரம் பெறுவதற்கு நமது தலைவர்கள் பட்ட சிரமங்களை பள்ளி பருவத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலகில் மகாத்மா என்ற பட்டம் பெற்ற ஒரே தலைவர் நமது தேசப்பிதா. உலகில் வேறு எந்த தலைவருக்கும் இந்த பட்டம் தரப்படவில்லை. காரணம் அவர் பின்பற்றிய அகிம்சை கொள்கை. எத்தனையோ நம் தலைவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளனர். எனவே அந்த சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே தேசப்பற்று கொண்டவர்களாக மாற்றும் உன்னத பணியை ஆசிரியர்கள் உறுதியுடன் தவறாமல் செய்திட வேண்டும்.', என்றார். நிகழ்ச்சியில், 'சுதந்திரம்', 'சுதந்திர போராட்டம்', 'தாய்நாடு', என்பன உள்ளிட்ட தலைப்புகளில் நடந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஆர்.டி.ஓ., வழங்கி பாராட்டினார். தென் பிராந்திய கப்பல் படை இணை ஆணையர் (தணிக்கை) ராம் ஜெயந்த், இளநிலை முதல்வர் கயல்விழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.