முடங்கிய நீர்மின் திட்டங்களை நிறைவேற்றுவதே அரசின் நோக்கம் மின்துறை அமைச்சர் தகவல்
மூணாறு : 'மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முடங்கிய நீர் மின் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதே அரசின் நோக்கம்' என கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார்.அவர் தலைமையில் அமைக்கப்பட்ட சட்டசபை துணை குழு மூணாறு அருகே பள்ளிவாசல் மற்றும் மூலமற்றம் ஆகிய நீர் மின் நிலையங்கள், இடுக்கி அணை ஆகியவற்றை இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். பின்னர் அக்குழு மூலமற்றத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அதன்பிறகு அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கூறுகையில்: மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முடங்கி கிடக்கும் நீர் மின் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதே அரசின் நோக்கம். 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நடக்கும் கட்டுமான பணிகளை மதிப்பீடு செய்யும் வகையில் பள்ளிவாசல், மூலமற்றம் ஆகிய பகுதிகளை சட்டசபை துணை குழு ஆய்வு மேற்கொண்டது. மின்சாரம் பயன்பாடு அதிகரிக்கும் நேரங்களில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப் படுகின்றது. முடங்கி கிடக்கும் திட்டங்களை நிறைவேற்றினால், அப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும், என்றார்.