| ADDED : ஜூலை 04, 2024 02:03 AM
மூணாறு: தேவிகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது இந்திய கம்யூ., பிரமுகர் மிரட்டல் விடுத்தது போன்று அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். அதனை கேரள உயர் நீதி மன்றம் தடை விதித்தது.இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் அரசு நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினருக்கு உதவும் வகையில் 2012ல் நிலம் பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டனர். அவர்கள் வருவாய் துறையினருக்கு உதவி வந்தனர்.இந்நிலையில் மூணாறு அருகே தேவிகுளத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைத்த ஷெட்டை வருவாய்துறையினர், நிலம் பாதுகாப்பு படையினர் இணைந்து ஜூன் 20ல் அகற்றினர்.அப்போது இந்திய கம்யூ., உள்ளூர் செயலாளர் ஆரோக்கியதாஸ் ' அனைவரையும் பணியிடமாற்றம் செய்து வீட்டில் உட்கார வைப்பேன்' என அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் நிலம் பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று பேரை திடீரென பணியிடமாற்றம் செய்து ஜூலை 1ம் தேதி கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.தடை: பணியிட மாற்றத்திற்கான காரணத்தை சரிவர கூறவில்லை என்பதால் கலெக்டர் உத்தரவுக்கு தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், மனு ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதனிடையே பணியிடமாற்றம் செய்யப்பட்ட மூவரும் பணியில் இருந்து விலக முடிவு செய்தனர். பணியிடமாற்றத்திற்கு உயர் நீதி மன்றம் தடை விதித்ததால் முடிவை கைவிட்டனர்.