மறையூர் -- சின்னார் இடையே ரோடு சீரமைப்பு பணி போக்குவரத்திற்கு கட்டுப்பாடு
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கிமாவட்டம் மறையூர்- சின்னார் இடையே ரோடு சீரமைப்பு பணிகள் நடப்பதால் பஸ் உள்ளிட்ட போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.சுற்றுலா பகுதியான மூணாறை, தமிழகம் உட்பட பிற மாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய சாலைகளில் மூணாறு- உடுமலைபேட்டை ரோடு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மறையூர் முதல் கேரள- தமிழக எல்லையான சின்னார் வரையிலான 16 கி.மீ., துாரம் ரோடு குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை ரூ.7.5 கோடி செலவில் சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.அந்த வழியில் தினமும் பஸ் உட்பட நுாற்றுக் கணக்கில் வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் மார்ச் 30 வரை நீடிக்கும்.