இரவில் பாசனத்திற்கு தண்ணீர் சப்ளை; பகலில் வாய்க்கால் பராமரிப்பு பணி விவசாய சங்கத்தினர் தீவிரம்
கம்பம்: இரவு முழுவதும் பாசனத்திற்கு தண்ணீர் சப்ளை, பகல் நேரங்களில் சப்ளையை நிறுத்தி வாய்க்கால் பராமரிப்பு பணி என விவசாய சங்கத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 17 வாய்க்கால்கள் உள்ளது. லோயர்கேம்ப்பில் ஆரம்பித்து பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கரில் இருபோக பாசன நிலங்கள் உள்ளன. நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் பராமரிப்பின்றி உள்ளது.தற்போது முதல் போக நெல் சாகுபடி நடவு செய்து 30 முதல் 60 நாட்கள் ஆகிறது. வாய்க்கால்கள் பராமிப்பில்லாததால், சரியான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. வாய்க்காலில் வரும் நீர் பக்கவாட்டு கரைகள் வழியாக வீணாகிறது. குறிப்பாக கம்பம் சின்ன வாய்க்கால் பாசனத்தில் சரிவர தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். நீர் வளத்துறையினர் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. இதனால் கம்பம் விவசாய சங்கத்தினர் களத்தில் குதித்துள்ளனர்.காமயகவுண்டன் ரோட்டில் ஏழரசு களத்தில் இருந்து குள்ளப்பகவுண்டன் பட்டி வரை 11 கி.மீ. நீள வாய்க்காலை தூர் வார முடிவு செய்தது. பராமரிப்பு பணிகளும் நடைபெற வேண்டும். தண்ணீர் சப்ளையும் பாதிக்க கூடாது. இதை கருத்தில் கொண்டு இரவு முழுவதும் வாய்க்காலில் தண்ணீர் சப்ளை செய்வது. பகலில் சப்ளையை நிறுத்தி விட்டு பராமரிப்பு பணிகள் என விவசாய சங்கம் சீரமைப்பு பணி செய்து வருகிறது. வாய்க்காலில் உள்ள செடி கொடிகள், புதர்களை அகற்றி, மண்மேடான பகுதிகளை சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.விவசாய சங்க செயலாளர் சுகுமாறன் , தண்ணீர் சரிவர வயல்களுக்கு கிடைக்கவில்லை. அணையிலிருக்கு வெளியேறும் தண்ணீர் வீணாகிறது. எனவே வேறு வழியின்றி நெல் நடவு செய்து சாகுபடி காலகட்டத்தில் வாய்க்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம். மதகுகள், ஷட்டர்களை பராமரிப்பு செய்து தர நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும் என்றார்.