உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இரு நாட்களில் 100 டன் குப்பை அகற்றம்

தேனியில் இரு நாட்களில் 100 டன் குப்பை அகற்றம்

தேனி: தேனியில் தீபாவளி மற்றும் அடுத்த நாளில் 100 டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளியை முன்னிட்டு தேனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தற்காலிக ரோட்டோர கடைகள் செயல்பட்டன. இது தவிர தெருக்களில் பட்டாசு வெடித்த குப்பை, பலகார பெட்டிகள் என குப்பை அதிகரித்து காணப்பட்டது. இதனால் வழக்கத்தை விட அதிக அளவில் குப்பை சேர்ந்தன. இதுபற்றி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேனியில் உள்ள 33 வார்டுகளில் தினசரி 30 முதல் 33 டன் வரை குப்பை சேகாரமானது. அதனை மக்கும், மக்காத, பிளாஸ்டிக் என தரம்பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் 48 டன், நேற்று 52 டன் என மொத்தம் 100 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சில பகுதிகளில் துாய்மை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு தினங்களில் வழக்கத்தை விட 40 டன் குப்பை அதிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பையை மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும், பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார். நகராட்சி வாகனத்தில் குப்பை சேகரித்த பின் வாகனத்தை மூடாமல் செல்வதால் ரோட்டிலும், பிற வாகன ஓட்டிகள் மீதும் குப்பைகள் சிதறியவாறு செல்கிறது. இதனை தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை