நான்கு நாட்களில் 111 வழக்குகள் பதிவு: ரூ.3.74 லட்சம் அபராதம்
மூணாறு: மூணாறில் மோட்டார் வாகனத் துறையினர் நான்கு நாட்கள் நடத்திய வாகன சோதனையில் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மூணாறுக்கு அக்.30ல் சுற்றுலா வந்த மும்பையைச் சேர்ந்த ஜான்வியிடம் ஆன்லைன் டாக்சி தொடர்பாக உள்ளூர் டாக்சி டிரைவர்கள் சிலர் மோசமாக நடந்து கொண்டனர். இச்சம்பவத்தில் மூன்று டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பிரச்னையில் தலையிட்ட கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் மூன்று டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்யவும், மூணாறில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். அதன்படி இடுக்கி போக்குவரத்துத்துறை அதிகாரி ஷமீர் தலைமையில் மூணாறில் நவ.4 முதல் நவ.8 வரை வாகன சோதனை நடந்தது. அதில் தகுதி சான்று, ஆட்டோக்களில் மீட்டர், லைசென்ஸ், பெர்மிட் உள்பட போதிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் சிக்கின. அது தொடர்பாக 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.