12 சதவீதம் போனஸ்: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி
மூணாறு: மூணாறில் கே.டி.எச்.பி. தேயிலை கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்தாண்டு 13 சதவீதம் போனஸ் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 12 சதவீதமாக குறைந்ததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த கம்பெனி தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி செயல்பட்டு வருகிறது. அதில் நிரந்தர தொழிலாளர்கள் 9ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் லாப விகிதத்தின் அடிப்படையில் நிர்வாகம் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி 2024 --20-25 நிதியாண்டின் போனஸ் குறித்து பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. தொழிற்சங்க பிரதிநிதிகள் மணி, முனியாண்டி (ஐ.என்.டி.யு.சி), அவுசேப், சந்திரபால்(ஏ.ஐ.டி.யு.சி), சசி, சாஜி (சி.ஐ.டி.யு) ஆகியோர் தோட்ட நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் தொழிலாளர்களுக்கு 12 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. அதனை ஆக.30ம் தேதிக்குள் வழங்க நிர்வாகம் முன் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 13 சதவீதம் போனஸ் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 12 சதவீதமாக குறைந்ததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஹாரிசன் மலையாளம் தேயிலை கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் போனஸ் பேச்சு வார்த்தை இன்று (ஆக.26) தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.