கனவு இல்ல திட்டத்திற்கு 1300 பயனாளிகள் தேர்வு
தேனி : மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு 1300 பயனாளிகள் முதற்கட்ட தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பில் குடிசை வீடுகள், மண் சுவர் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற கலைஞர் கனவு இல்ல திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்ட பயனாளிகளுக்கு அரசு தலா ரூ.3.50 லட்சம் இலவசமாக வழங்குகிறது. மாவட்டத்தில் கடந்தாண்டு இத்திட்டத்தில் 961 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டிற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பணி கடந்த மாதம் துவங்கியது. இதில் 1300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய விபரங்கள் ஜன.,26ல் நடந்த கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பயனாளிகளின் விபரங்கள், ஆவணங்கள் சரிபார்ப்பு பணி விரைவில் துவங்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது.