பஸ்சில் காசுகளை சிதறவிட்டு 16.5 பவுன் நகை திருட்டு
ஆண்டிபட்டி:தேனிமாவட்டம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். மனைவி மாரியம்மாள் 59, உடன் டிச.,4 ல் சாத்துார் முத்தால்நாயக்கன்பட்டியில் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றனர். மறுநாள் காலை ஆண்டிபட்டி வந்தனர். மாரியம்மாள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பர்சில் வைத்து, அதனை துணிப்பையில் வைத்திருந்தார். மாலை 4:45 மணியளவில் ஆண்டிபட்டி - தேனி அரசு பஸ்சில் பயணித்தனர். மாரியம்மாள் நகைகள் இருந்த பையை மடியில் வைத்து இருந்தார். பஸ் சண்முகசுந்தரபுரத்தை கடந்ததும் மாரியம்மாள் அருகில் நின்றிருந்த பெண் கையில் வைத்திருந்த சில்லறை காசுகளை கீழே சிதறவிட்டார். மாரியம்மாளையும், கணவரையும் காசுகளை எடுத்து தர கூறினார். கீழே குனிந்து காசுகளை எடுத்த போது பெண் மாரியம்மாளின் மடியில் இருந்த பையை கீழே இழுத்து சேலையால் மறைத்துள்ளார். மாரியம்மாள் பையை விட கூறியதும் அப்பெண் பையை கீழே இழுத்து போட்டுள்ளார். அப்போது பஸ் கீழமுத்தனம்பட்டி ஸ்டாப்பில் நின்றது. அந்த சந்தர்பத்தில் சந்தேகப் பெண் கீழே இறங்கி விட்டார். தேனிக்கு சென்று இறங்கிய மாரியம்மாள் அவரது பையை பார்த்தபோது பர்ஸ் திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த 16.5 பவுன் நகைகளை காணவில்லை. பஸ்சில் தனக்கு அருகில் நின்றிருந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாக மாரியம்மாள் தெரிவித் புகாரின்படி ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், க.விலக்கு எஸ்.ஐ., சவுரியம்மாள்தேவி பஸ்சில் சில்லறைகளை சிதறி விட்ட பெண் நகைகளை திருடி சென்றாரா என விசாரிக்கின்றனர்.