உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடுப்பூசி செலுத்தியதால் 17 வெள்ளாடு இறப்பா * போலீஸ் விசாரணை

தடுப்பூசி செலுத்தியதால் 17 வெள்ளாடு இறப்பா * போலீஸ் விசாரணை

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தில் பாண்டியம்மாள் என்பவர் வளர்ந்த வெள்ளாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து 17 ஆடுகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தினமும் 40 வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலையில் வீடு திரும்புவார். சில நாட்களுக்கு முன் வருஷநாடு கால்நடை மருத்துவக்குழுவினர் பாண்டியம்மாள் வளர்க்கும் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்திய மறு நாளில் அடுத்தடுத்து இரு ஆடுகள் இறந்தன. இந்நிலையில் நேற்று காலை பாண்டியம்மாள் வழக்கம் போல ஆடுகளை மேச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது 15 ஆடுகள் திடீரென நடுங்கியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்து இறந்தன. அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள் கால்நடை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கால்நடை துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு ஆடாக உடற்கூராய்வு செய்த பிறகு புதைத்தனர்.ஆடுகள் இறப்புக்கு தடுப்பு ஊசி செலுத்தியதே காரணம் என பாண்டியம்மாள் அளித்த புகாரின்படி கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகளுக்கான பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின் இறப்புக்கான காரணம் தெரியும் என கால்நடை துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் 15 ஆடுகள் இறந்த சம்பவம் வருஷநாடு பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறுகையில், ''17 வெள்ளாடுகளையும் டாக்டர்கள் உடற்கூராய்வு செய்து மாதிரிகள் எடுத்து மதுரையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அறிக்கை கிடைத்தபின் ஆடுகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும். இருப்பினும் போலீஸ் தரப்பில் வெள்ளாடுகளுக்கு யாரும் விஷம் கொடுத்துள்ளார்களா எனவும் விசாரிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை