தேனி ஜோதிடர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு
தேனி:தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஜோதிடர் ராமராவ் 47, வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் ரூ. 6.26 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர். பழனிசெட்டிபட்டி பெரியார் 2வது தெருவில் ஜோதிடர் ராமாராவ் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் வீட்டின் முதல் தளத்தில் பீரோவை வைத்திருந்தார். ஜூன் 19 இரவு பீரோவில் பணம் எடுத்து விட்டு அறையை பூட்டி, தரைத்தளத்திற்கு சென்றார். மறுநாள் அவரது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை எடுக்க முதல் தளத்திற்கு சென்றார். அப்போது கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ராமாராவ் அறையின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த செயின்கள், தங்க காசுகள், மோதிரங்கள் என ரூ.6.26 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகள், ரூ. 16,500 மதிப்பிலான அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. வீட்டுச்சுவர் ஏறி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சத்தில் மக்கள்
பழனிசெட்டிபட்டி அருகே வீரபாண்டியில் ஒரு வீட்டில் கடந்த வாரம் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து முகமூடி திருடர்கள் பெண்கள் அணிந்திருந்த செயின்களை பறித்துச் சென்றனர். தேனி நகரை சுற்றி கடந்த சில வாரங்களாக நடக்கும் தொடர் திருட்டு,கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.