2475 விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிங்க் சல்பேட்
தேனி: மாவட்டத்தில் உள்ள நெற்பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அமில தன்மையை குறைக்கவும் 2475 விவசாயிகளுக்கு ஜிங்க் சல்பேட் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.நிலத்தில் ஜிங்க் சத்து குறைந்து காணப்பட்டால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் அமிலத்தன்மை அதிகம் உள்ள நிலங்களில் ஜிங்க் சத்து குறைந்து காணப்படும். இந்த சத்து குறைபாட்டினால் பயிர்கள் நிறம் மஞ்சள், காபி நிறத்தில் புள்ளிகள் தென்படும். நெற்பயிரில் இலையின் நரம்பு மட்டும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் பிற பகுதிகள் மஞ்சள், காய்ந்தது போல் காணப்படும். செடிகள் வளர்ச்சி குறைவாக இருக்கும். இதனை தவிர்க்க மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 200, தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் தலா 350, கம்பம் 450, சின்னமனுார் 475, போடி 300 என 2475 விவசாயிகளுக்கு தலா 10 கிலோ ஜிங்க் சல்பேட் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயன்படுத்த வேண்டும். ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள உதவி வேளாண் இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.