இரண்டாம் போக சாகுபடிக்கு 33டன் விதை நெல் விற்பனைக்கு தயார்
கம்பம்: இரண்டாம் போகத்திற்கான விதை நெல் 33 டன் விற்பனைக்கு தயாராக இருப்பதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக பருவ மழை தேவையான அளவு பெய்ததால், நெல் சாகுபடி எந்தவித தடையுமின்றி நடந்து வருகிறது. இந்தாண்டு தற்போது முதல் போக நெல் அறுவடை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போக அறுவடை நடக்கும் போதே , விவசாயிகள் இரண்டாம் போகத்திற்கு நாற்றுகள் வளர்க்க துவங்குவார்கள். கடந்தாண்டு இரண்டாம் போகத்திற்கு என்.எல்.ஆர். என்ற ரகம் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டும் விவசாயிகள் அந்த ரகத்தை விரும்புகின்றனர். இது குறித்து கம்பம் வேளாண் துணை அலுவலர் குணசேகர் கூறுகையில், என்.எல்.ஆர். ரகம் விதை நெல் விற்பனைக்கு தயாராக உள்ளது. கிலோவிற்கு ரூ.42. மானியம் ரூ.17.50 தரப்படுகிறது . ஒரு விவசாயிக்கு 20 கிலோ மட்டுமே அனுமதி இருந்த போதும் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறோம். இதை தவிர்த்து கோ 55, ஆடு துறை 54 என்ற இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த ரகங்களும் அதே விலையில் தரப்படுகிறது. மேலும் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் சிவன் சம்பா, சீரக சம்பா விற்பனைக்கு தயாராக உள்ளது. சிவன் சம்பா கிலோ ரூ.70 ஆகும். 50 சதவீத மானியம் ரூ.35. சீரக சம்பா 50 சதவீதம் போக கிலோ ரூ.25 கிடைக்கும். என்.எல்.ஆர். மற்றும் ஆடு துறை 54, கோ 55 ரகங்கள் 33 டன் வரை இருப்பு உள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.