சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி 700 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தேனி : மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 700 பேர் பங்கேற்கின்றனர். நமது நாட்டின் சுதந்திர தினம் ஆக.,15ல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் காலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய அனைத்து அரசு துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. விழாவில் போலீஸ் அணிவகுப்பு, பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'விழாவில் பள்ளி மாணவர்கள் 700 பேர் நடனம், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இதற்காக மாணவர்கள் பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியிலும்,' பங்கேற்கின்றனர்.