கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் 77.81 சதவிகிதம் பேர் தேர்ச்சி
மூணாறு: கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் 77.81 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.மாநிலத்தில் பிளஸ் 2, தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளி ஆகியவற்றின் தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 3,70,642 பேரில் 2,88,394 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 77.81. கடந்தாண்டு 78.69 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.88 சதவிகிதம் குறைவு. எர்ணாகுளம் மாவட்டத்தில் மிகவும் கூடுதலாக 83.09 சதவிகிதமும், காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் குறைவாக 71.09 சதவிகித தேர்ச்சி பெற்றனர். அனைத்து பாடங்களிலும் நூறு சதவிகிதம் மதிப்பெண் என்ற அடிப்படையில் 30,145 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர். கடந்தாண்டு 39,242 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.இரண்டாம் இடம்: மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 9596 பேரில் 7965 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 83. அனைத்து பாடங்களிலும் 929 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.கடந்தாண்டு 83.44 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 0.44 ஆக குறைந்தது குறிப்பிடதக்கது. தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான மறு தேர்வு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை நடக்கிறது.