வாழை இலைக்கட்டு ஒன்று ரூ.7ஆயிரத்துக்கு விற்பனை
ஆண்டிபட்டி,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளை முன்னிட்டு நேற்று வாழை இலைக்கட்டு ரூ.7000 வரை விற்பனையானது. ஆண்டிபட்டி பகுதியில் அணைக்கரைப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் வாழை சாகுபடி நடக்கிறது. இப்பகுதி தோட்டங்களில் அறுக்கப்படும் வாழை இலை ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பல இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விநாயக சதுர்த்தி, தொடர்ச்சியான முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வாழை இலைக்கட்டு நேற்று ரூ.7000 வரை விற்பனையானது. சில்லரை விலையில் 5 இலைகள் கொண்ட மடி அளவுக்கு தக்கபடி ரூ.80 முதல் ரூ.150 வரை விற்றது. வாழை இலை வியாபாரிகள் கூறியதாவது: சில நாட்களாக ரூ.3000 ஆக இருந்த கட்டு ஒன்று நேற்று முன்தினம் ரூ.4500 வரையும், நேற்று ரூ.7000 வரையும் உயர்ந்துள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் வாழை இலைகள் வரத்தும் குறைந்துள்ளது. தேவை அதிகரிப்பால் இலைகள் விலை உயர்ந்துள்ளது என்றனர்.