பணியிடத்தில் பெண்களிடம் அத்துமீறிய 6 பேர் மீது நடவடிக்கை; புகார் உறுதியானதால் உள்ளூர் குழு பரிந்துரை
பெண்கள் பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதித்தால் புகார் தெரிவிக்க நிறுவனங்கள் அளவில் உள்ளக புகார் குழுக்களும், உள்ளாட்சி அளவிலான குழுக்களும், மாவட்ட அளவில் கலெக்டர் மேற்பார்வையில் உள்ளூர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம். வட்டார, மாவட்ட குழுக்கள் விபரங்கள் மாவட்ட இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பத்து தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் இந்த குழு அமைப்பது கட்டாயமாகும். இதில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவிற்கு சப் கலெக்டர் நிலையிலான அதிகாரி தலைமை வகிக்கிறார். இக்குழு கலெக்டர் மேற்பார்வையில் செயல்படுகிறது. இந்த குழுக்கள் 2019 முதல் செயல்படுகிறது. தற்போது புகார்களை தெரிவிக்க நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளக குழு தலைவரிடம் புகார் தெரிவிக்கலாம். அந்த விசாரணை சரியாக இல்லை என கருதினால் வட்டார குழுவிடம் அல்லது மாவட்ட உள்ளூர் குழுவிடம் புகார் அளிக்கலாம். 575 குழுக்கள் அமைப்பு இந்த குழு நடவடிக்கைகள் பற்றி சமூக நலத்துறையினர் கூறியதாவது: பணிபுரியும் இடத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானால் பெண்கள் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பலர் புகார் தெரிவித்துள்ளனர். புகார் விசாரிக்கப்பட்டு அந்தந்த துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை தனியார் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் என 575 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தலா 30 புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 7 புகார்கள் வந்துள்ளன. இதில் விசாரணையில் 6 புகார்களில் தவறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதாரத்துறை, கல்வி, ஊராட்சிகள் தனியார் நிறுவன அலுவலர்கள் என 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை தலைமை அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க விரும்புவோர் 04546 - 261 841 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றனர்.