மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்
தேனி: தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப் பட்டுள்ளது.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் அனைத்து கோயில்களிலும் போலீசாருடன், ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இதுதவிர அம்பேத்கர் பிறந்தநாள் விழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகள், மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைகள் உள்ள 8 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில கிராமங்களிலும் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்புப் பணிகளில் வழக்கத்தை விட கூடுதலாக 380 போலீசார் இன்று பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.