அகமலை ரோடு சீரமைப்பு பணி: எம்.பி., ஆய்வு
-பெரியகுளம் : அகமலை ரோடு சீரமைப்பு பணியை தங்கத்தமிழ் செல்வன் எம்.பி., பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.போடி ஒன்றியம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாக செல்லும் ரோடு உள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 16 கி.மீ., தூரத்திற்கு மண் சரிவு ஏற்பட்டது. போக்குவரத்து முடங்கியது. இதனால் மலை கிராமங்களிலிருந்து எலுமிச்சை, அவகோடா உட்பட விளை பொருட்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வது பாதித்தது.மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மண் அள்ளும் இயந்திரம், பணியாளர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இது வரை 11 கி.மீ., தூரத்திற்கு சீரமைப்பு பணி முடிந்துள்ளது. சீரமைப்பு பணியை தங்கத்தமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டனர்.தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தித்தியிடம், பணிகளை விரைந்து முடிக்குமாறு தங்கத்தமிழ்செல்வன் எம்.பி., கேட்டுக்கொண்டார்.