தமிழகத்தில் ஆடி சாகுபடி பயிர்கள் சர்வே பணி 86 சதவீதம் நிறைவு வேளாண்துறையினர் தகவல்
தேனி:தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கணக்கெடுப்புப்பணி 86 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணியை இரு வாரங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆடி, கார்த்திகை, வைகாசியில் சாகுபடி அதிகம் நடக்கிறது. இதனால் ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்த பயிர்கள் கணக் கெடுப்பு பணி (டிஜிட்டல் கிராப் சர்வே) கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆடி பட்ட சாகுபடி கணக்கெடுப்பு பணிக்கு வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கணக்கெடுப்பு நடத்தவில்லை. தொடர்ந்து கார்த்திகை, கோடை பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கணக்கெடுப்பு பணி வேளாண், தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் கணக் கெடுப்பு பணியில் ஈடுபட எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த முறை தனியார் மூலம் ஆடிப்பட்ட சாகுபடி பயிர் கணக்கெடுப்பு பணி ஆக., 3வது வாரத்தில் துவங்கியது. தமிழகத்தில் 3.42 கோடி சர்வே உட்பிரிவு செய்யப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதில் நேற்று வரை 2.95 கோடி நிலங்களில் சாகுபடி பயிர்கள் கிராப் சர்வே செயலியில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. வேளாண்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் 86 சதவீதம் கிராப் சர்வே பணிகள் நிறைவடைந்துள்ளது. மலைப்பகுதிகள், அலைபேசி சிக்னல் கிடைக்காத பகுதிகளில் மட்டும் சர்வே பணிகளில் தொய்வு உள்ளது. இரு வாரங்களில் 100 சதவீதம் சர்வே முடிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.