நெடுஞ்சாலைகளில் மதுபான விளம்பர பலகையால் விபத்து அபாயம்நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தேனி : நெடுஞ்சாலைகளில் நீதிமன்ற உத்தரவினை மீறி வைக்கப்பட்டுள்ள மனமகிழ்மன்ற விளம்பர பலகைகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் மனமகிழ்மன்றங்களின் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் 2018 ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், தேனி மாவட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் பல இடங்களில் ரோட்டோரங்களில் இரவில் ஒளிரும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேனி புது பஸ் ஸ்டாண்ட், பழனிசெட்டிபட்டி, மதுராபுரி விலக்கு பகுதிகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மதுராபுரி விலக்கு பகுதி திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலை முக்கிய பைபாஸ் ரோடாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்ற விளம்பர பலகையை பார்த்து ரோட்டோரம் லாரிகளை நிறுத்தி விட்டு பாருக்குள் செல்கின்றனர். அதனால் இப் பகுதி விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. சபரிமலை சீசன் ஆரம்பிக்க உள்ளதால் இந்த ரோட்டில் அதிக வாகனங்கள் 24 மணிநேரமும் வந்து செல்லும். இதுபோன்ற இடையூறுகளால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.