நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசர கூட்டம்
ஆண்டிபட்டி: நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசரக் கூட்டம் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சந்திரகலா (தி.மு.க.) மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தாமதம் ஏற்பட்டதால் 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 29ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வார்டு உறுப்பினர்கள் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வழங்கப்பட்ட மனுவில் 4 வார்டு உறுப்பினர்களின் கையொப்பம் போலியாக இருப்பதாக பேரூராட்சி தலைவர் சார்பில் வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடத்தி கையொப்பம் அனைத்தும் பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் சந்திரகலா துணைத் தலைவர் ஜோதி உட்பட 17 கவுன்சிலர்கள் பங்கேற்று கை யெழுத்திட்டனர்.