பழைய தெருக்களில் மீண்டும் வடிகால் வசதிக்கு ஏற்பாடு: ஆறு நகராட்சிகளில் வடிகால்கள் சீரமைக்க முடிவு
தேனி: ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய கட்டுமானங்கள் உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என நகராட்சி தலைவர்கள், மாநில நகராட்சிகள் நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை ஏற்று விரைவில் நிதி ஒதுக்கப்படும் என அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி தெருக்கள் விரைவில் புதுப்பொழிவு பெற உள்ளன.மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம் நகராட்சிகளில் தலா 33 வார்டுகள், பெரியகுளத்தில் 30 வார்டுகள், சின்னமனுாரில் 27 வார்டுகள், கூடலுாரில் 24 வார்டுகள் என மொத்தம் 180 வார்டுகள் உள்ளன. ஆறு நகராட்சிகளிலும் 59 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அனைத்து நகராட்சிகளில் வார்டு விரிவாக்கப் பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளன. இந்த விரிவாக்கப் பகுதிகளில் புதிய கட்டுமானங்களில் பாதாள சாக்கடை,மழைநீர் வடிகால் அமைப்பதற்கும் இடம் ஒதுக்கி கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன. பழமையான கட்டுமான பகுதிகள்
நகராட்சிகளில் நெருக்கடியான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் இருந்தாலும், மழைநீர் வடிகால் முறையாக இல்லாததால் கழிவுநீருடன், மழைநீர் தெருக்களில் தேங்கும் நிலை உருவானது.இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் பேசி தீர்வு காண வலியுறுத்தினர். இம் மாதிரியான கோரிக்கைகள் 55 முதல் 75 ஆண்டுகள் பழமையான அதற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளன. இதுபோன்ற பழமையான வார்டுகளில் மழைநீர் வடிகால் அமைப்பு சீரமைக்காததால் அப்பகுதிகளில் கழிவுநீருடன், மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஆறு நகராட்சிகளின் தலைவர்கள், மாநில நகராட்சி நிர்வாகஆணையரகத்திற்கு மழைநீர் வடிகால் சீரமைக்க நிதி ஒதுக்கித்தர வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வளர்ச்சித்திட்ட பணிகளில் கழிவுநீர் செல்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனை தீர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அந்த நகராட்சிகளில் பணிகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்படும் என நகராட்சி நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், பழமையான வார்டு பகுதிகளில் பணிகள் துவங்க உள்ளன,' என்றார்.