வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி உதவி பொறியாளர், லைன் இன்ஸ்பெக்டர் கைது
சின்னமனுார்:தேனி மாவட்டம், சின்னமனுாரில், மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ்வரன் 40, லைன் இன்ஸ்பெக்டர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.சின்னமனூர் 4 வது வார்டு காளியம்மன் கோயில் தெரு முனியாண்டி 62 . இவர் தனது மாற்றுத்திறனாளி மகன் பால்பாண்டி 29,க்கு அரசு வேலை வாங்க முயற்சித்துள்ளார். மின்பாதை ஆய்வாளராக பணியாற்றிவரும் பாலமுருகன் என்பவரை முனியாண்டியை அணுகினார். மின்வாரியத்தில் பால்பாண்டிக்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு காமாட்சிபுரத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் சீலையம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரனிடம் 40, ரூ.10 லட்சம் தர வேண்டும் என பாலமுருகன் கூறி உள்ளார். இதனை நம்பி 2018 ல் ரூ.10 லட்சத்தை உதவி பொறியாளர் ராஜேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.ஆனால் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தர வில்லை. பல முறை கேட்டும் பலனில்லாததால் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முனியாண்டி வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவின் - பேரில் சின்னமனூர் போலீசார் 2023 பிப். 13 ல் ராஜேஸ்வரன், பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி ராஜேஸ்வரன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரனையும், பாலமுருகனையும் உடனே கைது செய்ய சின்னமனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து தற்போது நேற்று செக்கானுாரணி அருகே உள்ள கிண்ணிமங்கலம் துணை மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ராஜேஸ்வரனையும், புதுப்பட்டியில் லைன்மேனாக உள்ள பால முருகனையும் சின்னமனூர் போலீசார் கைது செய்தனர்.