விபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்
தேனி, செப். 2தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள இவற்றை போலீசார், நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்நகராட்சிக்கு உட்பட்ட மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு பகுதிகளில் ரோடு சந்திப்புகள் மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் பாதசாரிகளுக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகம் காணப்படுவதால் பல இடங்களில் இந்த பதாகைகள் கிழிந்தும், சரிந்தும் காணப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பொது மக்கள் சிரமம் ஏற்பட்டாலும் நகராட்சி அதிகாரிகளோ, போலீசாரோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் நகர் பகுதியில் பதாகைகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட தலைநகரில் பதாகைகளால் விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.