விலை குறைவால் வெற்றிலை விவசாயிகள் புலம்பல்
சின்னமனூர்: கோயில் திருவிழாக்கள், விசேஷங்களும் இல்லாததும், மழையால் வெற்றிலை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. சின்னமனூரில் கருப்பு வெற்றிலையும், பெரியகுளத்தில் வெள்ளை வெற்றிலையும் சாகுபடியாகிறது.இந்தாண்டு துவக்கத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக வெற்றிலை கொடிகள் கருகி, மகசூல் பாதிக்கப்பட்டது. தற்போது புதிய கொடிகள் நடவு பணி முடித்துள்ளனர். தை மாதம் மகசூல் கிடைக்கும். சில வாரங்களாக வெற்றிலைக்கு நல்ல விலை கிடைத்தது. வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.270க்கும்,கருப்பு வெற்றிலை ரூ. 190க்கும் விற்றது.தற்போது கருப்பு வெற்றிலை கிலோ ரூ. 180 , வெள்ளை ரூ.250 என குறைந்துள்ளது.இது குறித்து வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில், கடந்த 2 மாதங்களாக கிடைத்து வந்த விலை 10 நாட்களாக குறைய துவங்கியுள்ளது.இதற்கு காரணம் கோயில் திருவிழாக்கள், விசேஷங்கள், திருமணங்கள் இல்லை. மேலும் மழை காரணமாக கடைகளில் வியாபாரமும் இல்லை. எனவே விலை குறைய துவங்கியுள்ளது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300 க்கும் கருப்பு வெற்றிலை கிலோ ரூ.250க்கும் விற்பனையானால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் என்றார்.