தேனி பஞ்சமி நில பிரச்னையில் இருதரப்பு மோதல்: போலீஸ் குவிப்பு நாளை அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
தேனி:தேனியில் பஞ்சமி நிலம் பிரச்னை தொடர்பாக இருதரப்பு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள பஞ்சமி நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அந்த நிலத்தை ஏழைகளுக்கு வழங்க கோரி நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்து வேலியை சில அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் அகற்றினர். அது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அங்கு கட்டுமானம் நடந்து வருவதாகவும், அதற்கு திருட்டு தனமாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வருவாய்த்துறையினர் நகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்ததனர்.இந்நிலையில் நேற்று பிரச்னைக்குரிய பஞ்சமி நில பகுதியில் ஒரு தரப்பினர் சென்றனர். அங்கு நடந்த கட்டுமான பணிகளை தடுத்து சேதப்படுத்தனர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையில்இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி, தாசில்தார் சதீஷ்குமார் ஆகியோர் இருதரப்பினருடன் பேசி அவர்களை கலைந்து செல்ல செய்தனர். நாளை தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.