| ADDED : மார் 10, 2024 04:11 AM
மூணாறு, கேரளாவில்,தமிழக எல்லையோரம் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ., ராஜேந்திரன் 2006 முதல் 2021 வரை 3 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டார் என கூறி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்ததால் கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளையும் இழந்தார். தொகுதியில் அனைத்து மக்களிடமும் செல்வாக்கு மிக்க ராஜேந்திரனின் மீதான நடவடிக்கை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இழப்பாக கட்சி மேலிடம் கருதியது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியை வலுப்படுத்த ராஜேந்திரனை மீண்டும் கட்சியில் இணைக்க மேலிடம் முயன்று வருகிறது. கேரளாவில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ., களம் இறங்கியுள்ளது. அதற்கு பிற கட்சிகளில் செல்வாக்கு மிக்க அதிருப்தியாளர்களை கட்சியில் இணைப்பதற்கு ரகசியபேச்சு நடத்துகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த எண்ணிய பா.ஜ., அதற்கு ராஜேந்திரனை குறி வைத்து ஆப்பரேசன் இடுக்கி' என்ற பெயரில் பேச்சுவார்த்தையை துவக்கினர். தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவருடன் ராஜேந்திரன் 'நெருக்கம்' என்பதால், அவர் மூலம் பா.ஜ. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மவுனம் காக்கும் ராஜேந்திரன் பச்சை கொடி காட்டுவார் என்ற நம்பிக்கையில் பா.ஜ., மேலிடம் உள்ளது. அதேசமயம் பா.ஜ., வின் செயல் காங்கிரஸ் கட்சியை மட்டும் இன்றி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கலக்கமடைய செய்துள்ளது.