உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீண்டும் இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க வாரியம் முயற்சி

மீண்டும் இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க வாரியம் முயற்சி

கம்பம்: இயற்கை வேளாண் முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சிகளை துவக்க உள்ளது. ஏலக்காய் சாகுபடி இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடியில் ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயன்படுத்துகின்றனர். நோய்களை கட்டுப்படுத்தவும், அதிக மகசூல் பெற வேறு வழியில்லை. ஆனால் இந்த நடவடிக்கை வர்த்தகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. ஏற்றுமதி செய்யும் போது வெளிநாடுகளில் ஆய்வக பரிசோதனை செய்து, இந்திய ஏலக்காயை திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந் நிலையை தவிர்த்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஸ்பைசஸ் வாரியம் சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையில் இயற்கை முறையில் ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் சாகுபடி செய்த ஏலக்காய்களுக்கு சிறப்பு ஏலம் நடத்தியது. இந்த சிறப்பு ஏலத்தில் கே.சி.பி.எம்.சி, மாஸ் எண்டர்பிரைசஸ், எஸ்.ஐ.சி.சி., ஹெக்டர் ஆகிய நான்கு ஏல நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றன. முதல் ஏலத்தில் எஸ்.ஐ.சி.சி. நிறுவனம் 2297 கிலோ விற்பனைக்கு வைத்தது. அடுத்து மாஸ் நிறுவனம் 15 ஆயிரம் கிலோவை விற்பனைக்கு வைத்தது. சராசரி விலையாக கிலோவிற்கு ரூ 1125 க்கு ஏலம் போனது. இந்த ஏலக்காய் அனைத்தும் ஸ்பைசஸ் வாரிய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, இயற்கை முறையில் சாகுபடி என்று சான்றளிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் வியாபாரிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இயற்கை முறையில் சாகுபடியில் மகசூலும் குறைவாக கிடைக்கிறது. விலையும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் இயற்கை முறை சாகுபடியை கைவிட்டனர். இயற்கை முறை சிறப்பு ஏலத்தையும் வாரியம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் ஏலக்காய் ஆராய்ச்சி நிலையங்களின் அறிவுறுத்தலின் படி, மீண்டும் இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க வாரியம் நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. அதன் பேரில் ஸ்பைசஸ் வாரியம் சில சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ