உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உடல் மீட்பு கணவன் உடலை கண்டுபிடிப்பதில் சிரமம்

 முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உடல் மீட்பு கணவன் உடலை கண்டுபிடிப்பதில் சிரமம்

கூடலுார்: தேனி மாவட்டம், கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி தம்பதி மாயமான சம்பவத்தில் மனைவி கணேஸ்வரி 50, உடல் நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மாயமான கணவர் சங்கர் 55, உடலை தேடும் பணி 2வது நாளாக தொடந்த போதிலும் நேற்று மாலை வரை கண்டுபிடிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கூடலுார் அருகே லோயர்கேம்பைச் சேர்ந்தவர் சங்கர். பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கணேஸ்வரி. இருவரும் நேற்று முன்தினம் வண்ணான் துறை அருகே பசு தீவனத்திற்காக புல் அறுக்க சென்றனர். புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது ஆற்றின் எதிர் கரையில் இவரது மகள் லட்சுமி, பேத்தி சஞ்சு 6, வந்துள்ளனர். பேத்தியை அழைத்து வருவதற்காக ஆற்றுக்குள் இறங்கி ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சென்ற சங்கர் தனது பேத்தியை தோளில் வைத்துக் கொண்டு மீண்டும் இக்கரைக்கு வரும்போது எதிர்பாராவிதமாக இருவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது. கரையில் புல் அறுத்துக் கொண்டிருந்த கணேஸ்வரி அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கினார். அவரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணியாளர் மணி ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றினார். கணவன் மனைவி இருவரையும் ஆற்று நீர் அடித்துச் சென்றது. பெரியாறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக கம்பம் தீயணைப்பு துறை அலுவலர் ரங்கபிரபு, உத்தமபாளையம் தீயணைப்புத்துறை அலுவலர் கதிர்வேலு தலைமையில் தேடும் பணி துவங்கியது. காஞ்சிமரத்துறை அருகே கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து சங்கரை தேடும் பணி நடந்தது. நேற்று மாலை வரை மாயமானவரின் உடல் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று இப்பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ