குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கூடலுார், : கூடலுார் நெடுஞ்சாலையில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்திற்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. லோயர்கேம்பில் இருந்து கூடலுார் வழியாக குடிநீர் செல்லும் மெயின்குழாய் உடைவதும் பின் சீரமைப்பதுமாக உள்ளது. பழைய தபால் நிலையம் அருகே ரோட்டின் மையப்பகுதியில் மெயின் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டின் நடுவில் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தீபாவளி விடுமுறையால் இதனை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேவாரம் பண்ணைப் புரத்திற்கு குடிநீர் சப்ளை பாதிக்கும். ஐந்து தினங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மெயின் குழாய் உடைந்தது குறிப்பிடத்தக்கது.