வேளாண் பொறியியல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
தேனி: கோடை உழவு செய்ய வேளாண் பொறியியல் துறை இயந்திரங்கள், கருவிகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு உதவிப் பொறியாளர் வினோத் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: துறை சார்பில் குறைந்த வாடகையில் வேளாண் பணிகளுக்கு தேவையான கருவிகள், இயந்திரங்கள், வாடகைக்கு வழங்கப்படுகிறது. வேளாண் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். வாடகை பணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு வாடகை மண் தள்ளும் இயந்திரம் ரூ.1230, மண் அள்ளும் இயந்திரம் 890, உழுவை இயந்திரம் ரூ.500, தேங்காய் பறிக்கும் இயந்திரம் ரூ. 450, நெல் அறுவடை இயந்திரம் ரூ.1160 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயந்திரங்களை பொறுத்து குறைந்த பட்ச நேரம் மாறுபடும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.