ஏலக்காய் கிலோ ரூ.3 ஆயிரம்
கம்பம்,:நீண்ட காலத்திற்கு பின் ஏலக்காய் கிலோ சராசரி விலை ரூ.3 ஆயிரத்தை தொட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு போட்டியாக குவாதிமாலா நாட்டில் ஏலக்காய் சாகுபடியாகிறது. அங்கு பராமரிப்பு செலவு இன்றி மானாவாரியில் விளைவதால் குவாதிமாலா ஏலக்காய் விலை குறைவாக கிடைக்கும்.இடுக்கி மாவட்டத்தில் கோடையில் கடும் வெயில் அடித்ததால் 40 முதல் 50 சதவீதம் மகசூல் பாதிப்பு இருக்கும். அதே சமயம் குவாதிமாலாவில் ஏலக்காய் மகசூல் 40 சதவீதம் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை ஆர்டர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இப்போதே வரத் துவங்கி உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு சராசரி விலை கிலோ ரூ.3 ஆயிரத்தை தொட்டுள்ளது.ஆர்டர்கள் கிடைத்த - போதும், அவர்கள் கேட்கும் 8 எம்.எம். போல்ட் ரக காய்கள் வரத்து குறைவாக இருப்பதால் ஏற்றுமதியாளர்கள் திணறுகின்றனர். ஏலக்காய் வர்த்தக வரலாற்தில் 2019 ஆக . 3 ல் சராசரி விலை கிலோ ரூ. 7 ஆயிரத்திற்கு விற்றது இதுவரை முறியடிக்கப்படவில்லை.