கோடை மழையை எதிர்நோக்கும் ஏல விவசாயிகள்; ஏலக்காய் கிலோ ரூ.700 வரை குறைந்தது
கம்பம் : ஏப்ரலுக்குள் கோடை மழை பெய்யாவிட்டால் ஏலக்காய் மகசூல் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. தற்போது சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.700 வரை குறைந்துள்ளது.இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் இந்திய ஏலக்காய்க்கு நல்ல மவுசு உள்ளது. இவற்றின் கலர், குணம், சைஸ் போன்றவற்றில் உயர்ந்தது. இருந்த போதும் ஏல விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கட்டுபடியான விலை கிடைக்காதது, நோய் தாக்குதல், மழை பெய்யாமல் வறட்சியால் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர் கூலி , வேளாண் இடு பொருள்கள் விலையேற்றம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு என பிரச்னைகள் ஏராளம்.கடந்தாண்டு முதல் தற்போது வரை சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. திடீர் மழை , மிக அதிக மழை , தொடர்ந்து அதிக வெயில் என பருவம் மாறி மாறி சீதோஷ்ண நிலை நிலவியது. கடந்த சில மாதங்களாக உச்சபட்ச வெயில் அடித்து வருகிறது. செடிகளை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மார்ச், ஏப்ரலில் கோடை மழை கிடைக்கும். தற்போது பொங்கலுக்கு பின் இதுவரை மழை கிடைக்கவில்லை. ஏப்ரலுக்குள் மழை கிடைக்காவிட்டால் ஏற்கெனவே மதிப்பீடுகள் செய்தபடி 60 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். விலை ரூ.700 வரை குறைவு
இந்நிலையில் கடந்தாண்டு ஜுனில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.3200 வரை அதிகபட்சமாக கிடைத்தது. பின் படிப்படியாக இறங்கி தற்போது சராசரி விலை ரூ.2500க்கு வந்துள்ளது . இது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.ஏலக்காய் சாகுபடி ஆலோசகர் அன்பழகன் கூறுகையில், கோடை மழை கிடைத்தால் ஏல விவசாயம் தப்பிக்கும். இல்லையென்றால் சிரமம். கிணறுகளில் தண்ணீர் உள்ள தோட்டங்களுக்கு பிரச்னை இல்லை. தண்ணீர் இல்லாத தோட்டங்களுக்கு வருண பகவான் கருணை காட்ட வேண்டும். நீடித்தால் 50 முதல் 60 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படும் என்றார்.