வேலை வாங்கி தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு
தேவாரம் : தேவாரம் அருகே திடீர்புரத்தைச் சேர்ந்தவர் சாமிவாஸ் 23. சுகாதார ஆய்வாளர் பணிக்கு படித்துள்ளார். இவரிடம் உத்தமபாளையம் கலிமேட்டுபட்டியைச் சேர்ந்த கணேசன், 'நான் உத்தமபாளையம் பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராகவும், ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பிலும், அரசியல் வாதிகளிடம் நல்ல பழக்கம் இருப்பதாக,' கூறி உள்ளார். கணேசன், கோட்டூரை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து சாமிவாஸ்க்கு சுகாதார ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி, ரூ. 2 லட்சம் செலவாகும் என்றனர். அதன் பேரில் இருவரது அலை பேசி வங்கி கணக்கில் சேர்த்து ரூ. ஒரு லட்சத்து 63 ஆயிரம் அனுப்பி உள்ளார். வேலை வாங்கி தராததால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ரூ.30 ஆயிரம் கொடுத்த நிலையில் மீதம் உள்ள பணத்தை தர மறுத்துள்ளனர். சாமிவாஸ் புகாரில் தேவாரம் போலீசார் கணேசன், முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.